வியாழன், ஜனவரி 05, 2017

ஒருநாள், டி20 கிரிக்கெட்: கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்

இந்திய அணியின் கேப்டன் 'மிஸ்டர் கூல்' தோனி, இந்தியா கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த காலத்தின் இணையற்ற கேப்டன்களில் தோனிக்கு முக்கிய இடம் உண்டு.

ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்தது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய பயணத்தின்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் டோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


இதேபோன்று தான் தற்போதும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விலகி ஆச்சரியத்தை அளித்துள்ளார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு கேப்டனும் நிகழ்த்தாத மகத்தான சாதனையை டோனி படைத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.

ஐ.சி.சி.யின் 3 கோப்பைகளை வென்ற உலகின் ஒரே கேப்டன் டோனி ஆவார்.

2007-ம் ஆண்டு அறிமுகமான முதலாவது 20 ஓவர் உலககோப்பையில் டோனி தலைமையிலான அணி வென்றது.

அதை தொடர்ந்து 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் போட்டி (50 ஓவர்) உலககோப்பையை வென்றார். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் டோனி. அதற்கு முன்பு 1983-ல் கபில்தேவ் உலககோப்பையை முதல்முறையாக பெற்றுக்கொடுத்தார். டோனி 2-வது உலககோப்பையை கைப்பற்றி சாதனை புரிந்தார்.

அதோடு மட்டுமின்றி 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி கொடுத்தார்.


மேலும் அவரது தலைமையில் தான் இந்திய அணி டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது..


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த மகேந்திரசிங் டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அதற்கு அடுத்த ஆண்டு (2005) டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

அதிரடியான ஆட்டம் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பிங் மூலம் 2007-ம் ஆண்டு 20 ஓவர் போட்டிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதே ஆண்டில் ஒருநாள் போட்டிக்கும், 2008-ம் ஆண்டு டெஸ்டுக்கும் கேப்டன் ஆனார். 3 நிலைகளிலும் கேப்டன் பணியில் சிறப்பாக செயல்பட்டு தனது முத்திரையை பதித்தார்.

199 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்து சாதனை புரிந்துள்ளார். இதில் 110 போட்டியில் வெற்றி கிடைத்தது. அதாவது வெற்றி சதவீதம் 59.57 ஆகும். அதிக ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்த இந்தியர். அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை டோனி படைத்தார். சர்வதேச அளவில் 3-வது வீரர் ஆவார்.

பாண்டிங் (ஆஸ்திரேலியா) 230 போட்டிக்கும், ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து) 218 போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் டோனி உள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்களில் பாண்டிங்குக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார். பாண்டிங் 165 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

72 இருபது ஓவர் போட்டிக்கு கேப்டனாக இருந்து சாதனை படைத்துள்ளார். உலகில் வேறு யாரும் இவ்வளவு அதிகமான ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்தது இல்லை. 41 ஆட்டத்தில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் டாரன்சேமி (27 வெற்றி) உள்ளார். டெஸ்ட் போட்டியில் 60-ல் கேப்டனாக இருந்து 27 டெஸ்டில் வென்றார்.

டெஸ்ட், ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 50-க்கும் அதிகமான போட்டிகளில் கேப்டனாக இருந்த ஒரே வீரர் டோனி ஆவார்.


அதிக சர்வதேச போட்டியில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் சேர்த்து) கேப்டனாக இருந்தவர் டோனி ஆவார். அவர் மொத்தம் 331 போட்டிக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாண்டிங் 324 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

டோனியின் சாதனைகைள் அனைத்தும் மகத்தானவை. கேப்டன் பதவி இல்லாமல் அவர் நீண்டநாள் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியே. இதனால் அவரது சகாப்தம் தற்போது நிறைவு பெறும் நிலையில் இருக்கிறது. டோனி மிகச்சிறந்த கேப்டன். இவர் இந்திய அணிக்கு கிடைத்தது மிகவும் பெருமைப்படத்தக்கது.

Source : http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/05123141/1060247/Dhoni-proud-to-India.vpf

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts