புதன், செப்டம்பர் 16, 2009

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் கோப்பை வென்றது இந்தியா

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் கோப்பை வென்றது இந்தியா

கொழும்பு : முத்தரப்பு கிரிக்கெட்தொடரில் கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி.விறுவிறுப்பான பைனலில் சச்சின் சதம், ஹர்பஜன் மிரட்டல் பந்து வீச்சு கைகொடுக்க, இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் சுற்றில் தோல்வி அடைந்த நியூசிலாந்து வெளியேறியது. நேற்று கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

தினேஷ் இல்லை: டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் "பார்ம்' இல்லாமல் தவித்த தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, விராத் கோஹ்லி சேர்க்கப் பட்டார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை.

நல்ல அடித்தளம்: இந்திய அணிக்கு சச்சின், டிராவிட் அருமையான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிராவிட் (39) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் தோனி, சச்சினுடன் இணைந்தார்.

சச்சின் சதம்: தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், 91 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் அரங்கில் இவர் அடிக்கும் 44 வது சதம் இது. தவிர, இலங்கை அணிக்கு எதிராக 8 வது சதம். மறுமுனையில் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த தோனி, ஒரு நாள் அரங்கில் 32 வது அரை சதம் கடந்தார். 56 ரன்கள் எடுத்த தோனி, மலிங்கா வேகத்தில் வெளியேறினார். சச்சின், தோனி ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது.

யுவராஜ் அதிரடி: தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், தசைப்பிடிப்பால் அவதிப்பட "ரன்னராக' டிராவிட் செயல்பட்டார். 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் 138 ரன்கள் குவித்த சச்சின் பெவிலியன் திரும்பினார். பின்னர் யுவராஜ் அதிரடியை தொடர்ந்தார். யூசுப் பதான் (0), ரெய்னா (8) ஏமாற்றம் அளித்தனர். ஒரு நாள் அரங்கில் யுவராஜ், 41 வது அரை சதம் கடந்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. 6 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 56 ரன்கள் குவித்த யுவராஜ், அவுட்டாகாமல் இருந்தார்.

ஹர்பஜன் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, தில்ஷன் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்து ஜெயசூர்யாவும் மிரட்ட, மின்னல் வேகத்தில் (6.2 ஓவரில்) இந்த ஜோடி 50 ரன்களை எட்டியது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஏமாற்றமளிக்க, "சுழல் நாயகன்' ஹர்பஜனை அழைத்தார் கேப்டன் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தில்ஷனை (42) கிளீன் போல்டாக்கினார் ஹர்பஜன். அடுத்து வந்த ஜெயவர்தனாவையும் (1) வெளியேற்றிய ஹர்பஜன், இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

சங்ககரா பரிதாபம்: ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க, யூசுப் பதான் பந்து வீச்சில் ஜெயசூர்யா (36) அவுட்டானார். யுவராஜ், மாத்திவ்சை (14) வெளியேற்றினார். அதிரடியாக ரன் குவிக்க நினைத்த துஷாரா (15) நிலைக்க வில்லை. பின்னர் சங்ககரா, கண் டம்பி இணைந்து பொறுப்புடன் ஆடினர். எதிர்பாராத விதமாக சங்ககரா (33), ஆர்.பி.சிங் பந்து வீச்சில் ஹிட் -அவுட்டானார்.
ஆறுதல் ஜோடி: அடுத்து வந்த கபுகேதரா, அரை சதம் கடந்த கண்டம்பியுடன் இணைந்தார். இந்த ஜோடி ஒவ்வொரு ரன்களாக சேர்க்க, இந்தியாவுக்கு நெருக்கடி ஆரம்பித்தது. கபுகேதரா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 வது விக்கெட்டுக்கு கண்டம்பி, கபுகேதரா ஜோடி 70 ரன்கள் எடுத்தது.

"மேட்ச் வின்னர்': இந்நிலையில் துவக்கம் முதலே பந்து வீச்சில் அசத்திக் கொண்டிருந்த ஹர்பஜன், ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கண்டம் பியை (66), அவுட்டாக்கி இலங்கை அணியின் நம்பிக்கையை தகர்த்தார். அடுத்த பந்திலேயே மலிங்காவையும் (0) வீழ்த்தி "மேட்ச் வின்னராக' ஜொலித்தார் ஹர்பஜன். 46.4 ஓவரில் ஆல்-அவுட்டான இலங்கை அணி, 273 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பவுலிங்கில் மிரட்டிய ஹர்பஜன் 5 விக்கெட் வீழ்த்தினார். 1

11 ஆண்டுகளுக்குப் பின்: இவ்வெற்றியின் மூலம், இலங்கை மண்ணில் நடந்த இரு அணிகளுக்கு மேல் பங்கேற்ற தொடர்களில், 11 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா கோப்பை வென்று சாதித்தது.

மூலம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3710&Value3=I

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts