மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு நேற்று பொன்னான நாள். தனது 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ரேங்கிங் பட்டியலில் “நம்பர்-1′ இடம் பெற்று சாதித்தது. இப்பெருமையை பெற மும்பை டெஸ்ட் வெற்றி முக்கிய காரணமாக அமைந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஜாகிர் கான் வேகத்தில் மிரட்ட, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்று, கோப்பையை சூப்பராக கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மிக முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட்டுக்கு 726 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது. இக்கட்டான நிலையில் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது.
ஜாகிர் 5 விக்.,:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரிலேயே ஜாகிர் கான் “ஷாக்’ கொடுத்தார். இவரது வேகத்தில் இலங்கை கேப்டன் சங்ககரா 137 ரன்களுக்கு அவுட்டானார். பின் ஹெராத்(3), குலசேகராவை (19) வெளியேற்றிய ஜாகிர், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி கட்டத்தில் முரளிதரன் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஜாகிர் கான் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய இவர், அதிக நேரம் நீடிக்கவில்லை. ஹர்பஜன் சுழலில் முரளிதரன்(14) சிக்க, இந்திய ரசிகர்கள் <உற்சாகத்தில் மிதந்தனர். இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
முதலிடம்:
இன்று காலை ஆட்டம் துவங்கியதில் இருந்து இலங்கை அணி வெறும் 7.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இதையடுத்து சுமார் 40 நிமிடங்களில் மகத்தான வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் 124 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. கடந்த 1932ல் லார்ட்சில், இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் இந்தியா விளையாடியது. தற்போது 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று அசத்தியுள்ளது.
முதல் இன்னிங்சில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது "டுவென்டி-20' போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.
ஸ்கோர் போர்டு:
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 393
இந்தியா 726/9 (டிக்ளேர்)
இரண்டாவது இன்னிங்ஸ்
இலங்கை
பரணவிதனா எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் 54(144)
தில்ஷன் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 16(27)
சங்ககரா (கே)தோனி(ப)ஜாகிர் 137(261)
ஜெயவர்தனா(கே)தோனி(ப)ஜாகிர் 12(24)
சமரவீரா(கே)லட்சுமண்(ப)ஜாகிர் 0(13)
மாத்யூஸ்(கே)தோனி(ப)ஓஜா 5(8)
பிரசன்னா எல்.பி.டபிள்யு.,(ப)ஓஜா 32(42)
குலசேகரா (கே)லட்சுமண்(ப)ஜாகிர் 19(68)
ஹெராத்(கே)ஓஜா(ப)ஜாகிர் 3(10)
முரளிதரன்(கே)தோனி(ப)ஹர்பஜன் 14(9)
வலகேதரா-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 17
மொத்தம் (100.4 ஓவரில் ஆல் அவுட்) 309
விக்கெட் வீழ்ச்சி: 1-29(தில்ஷன்), 2-119(பரணவிதனா), 3-135(ஜெயவர்தனா), 4-137(சமரவீரா), 5-144(மாத்யூஸ்), 6-208(பிரசன்னா), 7-278(சங்ககரா). 8-282(ஹெராத்), 9-307(குலசேகரா), 10-309(முரளிதரன்).
பந்து வீச்சு: ஹர்பஜன் 34.4-5-80-2, ஓஜா 23-4-84-2, ஜாகிர் 21-5-72-5, ஸ்ரீசாந்த் 13-4-36-1, சேவக் 9-2-24-0.
——
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.
—
கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.
—
கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
—
இது தான் சிறந்த அணி: சச்சின்
முதலிடத்தை பெறுவதற்கு நான் மட்டுமல்ல நாடே காத்திருந்தது. இப்பெருமையை பெறுவதற்கு கடந்த 18 மாதங்களாக வீரர்கள் கடுமையாக உழைத்தனர். கிறிஸ்டன் தவிர நீக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வெங்கடேஷ் பிரசாத்(பவுலிங்), ராபின் சிங்(பீல்டிங்) ஆகியோருக்கும் பங்கு உண்டு. இந்திய சார்பில் இதுவரை பங்கேற்ற அணிகளில் தோனி தலைமையிலான அணி தான் மிகச் சிறந்தது. துவக்க வீரர் முதல் 7வது வீரர் வரை சிறப்பாக பேட் செய்கிறார். அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை.
—
மறுபரிசீலனை முறை: சங்ககரா
மும்பை டெஸ்டில் அம்பயரின் தவறான தீர்ப்பு காரணமாக இரண்டு முறை தில்ஷன் அவுட்டானார். இது குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,""சில தவறான முடிவுகளால் 500 ரன் வாய்ப்பு, நிறைய விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு நழுவியது. இதற்கு அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை பின்பற்றப்படாததே காரணம்,'' என்றார். இதே கருத்தை வலியுறுத்திய முரளிதரன் கூறுகையில்,""ஐ.சி.சி., விரைவாக விழித்துக் கொண்டு, அனைத்து போட்டிகளிலும் அம்பயர் மறுபரிசீலனை முறையை அமல்படுத்த வேண்டும்,''என்றார்.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,""அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொரு முறையி<லு<ம் சாதக மற்றும் பாதக அம்சங்கள் இருக்கும். பயன் அடைந்தால் நல்ல முறை என்பர். பாதிக்கப்பட்டால் பழித்துக் கூறுவர்,''என்றார்.
—
ஹர்பஜன் "50'
நேற்று முரளிதரனை வெளியேற்றிய ஹர்பஜன், டெஸ்ட் அரங்கில் இலங்கைக்கு எதிராக 50வது விக்கெட்டை பெற்ற இரண்டாவது இந்திய வீரரானார். முன்னதாக கும்ளே 74 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
—
எட்டாவது முறை
நேற்றைய போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் எட்டாவது முறையாக இலங்கை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
—
இலங்கை ஏமாற்றம்
இதுவரை ஏழு முறை (1982/83, 86/87, 90/91, 93/94, 97/98, 2005/06, 2009/10) இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 17 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 10 போட்டியில் வெற்றி கண்டது. ஏழு போட்டி "டிராவில்' முடிந்தது. இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த இலங்கை அணிக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
* இந்தியா, இலங்கை அணிகள் இந்திய மண்ணில் ஏழு டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. இதில் இந்திய அணி ஐந்து முறை (1986/87, 90/91, 93/94, 2005/06, 09/10) தொடரை வென்றது. இரண்டு முறை தொடர் டிராவில் முடிந்தது.
—
சேவக் அதிரடி:
இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் இந்திய வீரர் சேவக் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 491 ரன்கள் குவித்துள்ளார். இத்தொடரில் 190 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
இந்தியா:
வீரர் போட்டி சதம்/அரைசதம் ரன்கள்
சேவக் 3 2/1 491
டிராவிட் 3 2/1 433
காம்பிர் 2 2/0 282
தோனி 3 2/0 214
சச்சின் 3 1/1 197
இலங்கை:
ஜெயவர்தனா 3 1/0 373
பிரசன்னா 3 1/0 297
தில்ஷன் 3 2/0 248
சங்ககரா 3 1/0 241
பரனவிதனா 3 0/2 200
—
ஹர்பஜன் துல்லியம்
இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி அதிகபட்சமாக 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இத்தொடரில் 6 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள்:
இந்தியா
வீரர் போட்டி விக்கெட்
ஹர்பஜன் 3 13
ஜாகிர் 3 10
ஓஜா 2 9
ஸ்ரீசாந்த் 2 8
இலங்கை:
ஹெராத் 3 11
முரளிதரன் 3 9
வெலகேதரா 3 6
நன்றி : தினமலர்
செவ்வாய், டிசம்பர் 08, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக