புதன், ஏப்ரல் 08, 2009

தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்தது

தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்து காட்டியுள்ளது. நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. மழை குறுக்கிட்டதால் வெலிங்டன் டெஸ்ட் "டிராவில்' முடிய, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நழுவியது. நியூசிலாந்து சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் "டிரா' ஆனது. மூன்றாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 379, நியூசிலாந்து 197 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 434 ரன்கள் எடுத்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 617 ரன்களை நிர்ணயித்தது. இமாலய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

டெய்லர் சதம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந் தது. ரோஸ் டெய்லர், பிராங்க்ளின் ஆட்டத்தை தொடர்ந்தனர். தனி ஆளாகப் போராடிய டெய்லர், டெஸ்ட் அரங்கில் 4 வது சதம் கடந்தார். 16 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் குவித்த இவர், ஹர்பஜன் சுழலில் போல்டானார். 5 வது விக்கெட்டுக்கு டெய்லர், பிராங்க்ளின் ஜோடி 142 ரன்கள் சேர்த்தது.

சச்சின் மிரட்டல்: ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதை அறிந்த கேப்டன் தோனி, சச்சினை பந்து வீச அழைத்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. சச்சின் சுழலில், மெக்கலம் (6), பிராங்க்ளின் (49) அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த சவுத்தி (3) சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

பறிபோன வெற்றி: உணவு இடைவேளைக்குப் பின் 30 நிமிடம் தான் ஆட்டம் நடந்தது. இதற்குப் பின் லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. 336 ரன்கள் பின்தங்கியிருந்தது. கேப்டன் வெட்டோரி (15), ஓ பிரையன் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும் மழை காரணமாக போட்டி "டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்திய தரப்பில் ஹர்பஜன் 4, சச்சின், ஜாகிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வரலாற்று சாதனை: வெலிங்டன் டெஸ்ட் வெற்றி பறிபோனாலும், ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 1967-68 ம் ஆண்டு மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை (3-1) வென்றிருந்தது.

சூப்பர் கேப்டன் : கேப்டன் தோனி தலைமை யிலான இந்திய அணியின் வெற்றி நடை தொடர்கிறது. இதுவரை டெஸ்ட் போட்டி களில் இவரது அணி தோல்வி அடைந்தது இல்லை. இதுவரை 7 போட்டிகளுக்கு தலைமை வகித்த தோனி, 5 வெற்றி, 2 "டிராவை' பதிவு செய்துள்ளார். இவரது தலைமையின் கீழ், இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் (1-0), தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை (1-0) வென்றுள்ளது.

ரூ. 15 லட்சம் பரிசு : இந்திய அணியின் புதிய சாதனைக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பாராட்டும், பரிசுத் தொகையும் அறிவித்து உள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில்,"" நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் (3-1) மற்றும் டெஸ்ட் (1-0) தொடர்களை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் களில் பங்கேற்ற வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சமும், அணி உதவியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும்,'' என்றார்.

எல்லாமே காம்பிர் : வெலிங்டன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 167 ரன்கள் குவித்து அசத்திய காம்பிர், ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 2 சதம் ஒரு அரை சதம் உட்பட 445 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதும் வென்றார். இது குறித்து காம்பிர் கூறுகையில்,""அன்னிய மண்ணில் முதன் முதலாக சிறப்பாக செயல்பட்டது திருப்தி அளிக்கிறது. சச்சின் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் நெருக்கடியின்றி விளையாடுமாறு அறிவுறுத்தினர். இதனால் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப் படுத்த முடிந்தது,'' என்றார்.

வெற்றியில் அனைவருக்கும் பங்கு : நியூசிலாந்து மண்ணில் பெற்ற சாதனை வெற்றியில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் சரியான அளவில் இடம் பெற்றிருந்தனர். அனுபவ வீரர்கள் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி ஆலோசனை வழங்கினர். வெற்றிக்கு ஒரு வீரர் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. காம்பிர் இத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்களான சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோரின் செயல்பாடு அணிக்கு பக்கபலமாக அமைந்தது. பின் வரிசை வீரர்களும் இத்தொடரில் சிறப்பாக பேட் செய்து அசத்தினர். இந்திய பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். ஜாகிர், இஷாந்த், ஹர்பஜன் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். இந்த வெற்றி கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. கூடுதலாக 10 ஓவர்கள் கிடைத்திருந்தால் வெலிங்டன் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இருப்போம். கடைசி நாளில் மழை பெய்யும் என எங்களுக்கு தெரியும். இருப்பினும் இயற்கையை யாரும் உறுதிபட கூற முடியாது. அதனால் 2வது இன்னிங்சை சற்று தாமதமாக "டிக்ளேர்' செய்தேன். குறைந்தது 110 ஓவர்கள் வீச முடியும் என எண்ணினேன். ஆனால் மழை சூழ்நிலையை மாற்றி விட்டது,'' என்றார்.

பறிபோன 100வது வெற்றி : மழை குறுக்கிட்டதால், இந்தியாவின் 100 வது டெஸ்ட் வெற்றி பறிபோனது. இதுவரை 429 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 99 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்து உள்ளது. வெலிங்டனில் நேற்று இந்தியா வெற்றி பெற்றிருந்தால், டெஸ்டில் வெற்றி சதம் அடித்திருக்கலாம்.

ஜனாதிபதி பாராட்டு : நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதில், ""நியூசிலாந்தில் புதிய சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களின் சாதனைகளால் இந்தியா பெருமை அடைகிறது. இனி வரும் தொடர்களிலும் அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என பாராட்டியுள்ளார்.
நன்றி : தினமலர் 08-04-2009

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts