" இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது தான் எனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த தருணம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இப்போட்டியை மறக்க முடியாது " என, சச்சின் தெரிவித்துள்ளார்
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். மிக நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடி வரும் இவர் நாளை 21வது காலடி எடுத்து வைக்கிறார். தனது கடந்தகால மறக்க முடியாத அனுபவங்களை சச்சின் இங்கே பகிர்ந்து கொள்கிறார்:
எனது 20 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் மிக நீண்டது. இதில் சிறப்பு வாய்ந்த பல்வேறு தருணங்கள் உள்ளன. அவற்றை கணக்கிடுவது கடினம். ஆனாலும், இந்திய அணிக்காக முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது மகத்தான தருணம். கடந்த 1989 நவ., 15ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றேன். அன்று இந்திய அணியின் "கேப்' அணிந்து களமிறங்கிய அனுபவம் என்றென்றும் என்மனதில் நிலைத்து இருக்கும்.
அதிர்ஷ்ட வாய்ப்பு:
இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.
புதிய மாற்றங்கள்:
கடந்த 1989ல் இருந்த கிரிக்கெட்டை விட தற்போது மூன்றாவது அம்பயர், "டுவென்டி-20' என நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. தவிர, பேட்ஸ்மேன்கள் பல்வேறு வகையில் அடித்து விளையாடுகிறார்கள். அவர்கள் "ரிஸ்க்' எடுக்கத் தயங்குவது இல்லை. ஏனெனில் ஒரு நல்ல ஆடுகளத்தில் இப்போதெல்லாம் 275 ரன்கள் என்பது ஒருநாள் போட்டியில் பெரிய ஸ்கோர் அல்ல.
டெஸ்ட் போட்டிகளில் முன்பு குறைந்த அளவில் தான் முடிவுகள் வந்தன. இது மக்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அதிக டெஸ்ட்கள் முடிவைத் தருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
புதிய சவால்:
எனது ஆட்டமுறையிலும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். ஏனெனில் கிரிக்கெட் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தகுந்து எப்போதும் நம்மை தயாராக வைத்திருப்பது கடினமானது.
தாய் பிரார்த்தனை:
நம்மை சார்ந்து இருப்பவர்களது ஒத்துழைப்பும் வெற்றிக்கு முக்கியமாக இருக்கும். எனது பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் எனது மனைவி என, எல்லோரும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். எனது தாயாருக்கு கிரிக்கெட் தெரியாது. ஆனால் எனது மற்றும் தேசத்தின் வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்திப்பார்.
இருண்ட அத்தியாயம்:
கடந்த 1999ல் வெடித்த கிரிக்கெட் சூதாட்டம் ஒரு இருண்ட அத்தியாயம். அது பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை.
ரசிகர்கள் ஆதரவு:
எனது மூத்த சகோதரர் தவிர, பிற சகோதர, சகோதரிகளிடமும் கிரிக்கெட் குறித்து விவாதிப்பேன். அடுத்து எனது மனைவியுடனும் இதுகுறித்து பேசுவேன். இதுதான் நான் நீண்ட ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம். இவைகள் தவிர, இந்திய ரசிகர்களிடம் இருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவும் கிடைத்தது. கோடிக்கணக்கான ரசிகர்களுடன் எனது வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4272&Value3=I
சனி, நவம்பர் 14, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக