செவ்வாய், டிசம்பர் 08, 2009

"நம்பர்-1" இடத்துக்கு முன்னேறி இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறி இந்திய அணி அசத்தியுள்ளது. இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் வந்த இலங்கை அணியின் சோகம் இந்த முறையும் தொடர்ந்தது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் "டிராவில்' முடிந்தது. இதனையடுத்த கான்பூர் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சூப்பர் கேப்டன்:
மீண்டும் ஒரு முறை தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துக் காட்டியுள்ளார் தோனி. 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இவரது தலைமையில் இந்திய அணி "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், 2 சதங்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சேவக் அதிரடி:
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஜொலித்தார் இந்திய துவக்க வீரர் சேவக். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல துவக்கம் ஏற்படுத்திக் கொடுத்த இவர், வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு துவக்க வீரர் காம்பிரின் செயல்பாடும் சிறப்பானதாக அமைந்தது.
அனுபவ அசத்தல்:
இத்தொடரில் இடம் பெற்ற அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்துள்ளனர். காம்பிருக்குப் பதில் மும்பை டெஸ்டில் இடம் பெற்ற தமிழக வீரர் முரளி விஜய் சிறந்த துவக்க வீரராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
வேகம் மிரட்டல்:
பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கிலும் மிரட்டியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பிய ஜாகிர், ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை அளித்தனர். ஹர்பஜன், ஓஜாவின் சுழற் பந்து வீச்சு பக்கபலமாக அமைந்தது. கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு இத்தொடரில் வெற்றியை எட்டிய இந்திய அணி, அடுத்தடுத்த தொடர்களில் வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம்.
இலங்கை சோகம்:
இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் வந்த இலங்கை அணிக்கு சோகமே மிஞ்சியது. தொடரையும் இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தில்ஷன், ஜெயவர்தனா, சங்ககரா ஆகியோர் மட்டுமே ஆறுதல் அளித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமரவீரா சொதப்பினார்.
முரளி ஏமாற்றம்:
முரளிதரனை நம்பி வந்த இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று போட்டிகளில் பங்கேற்ற இவர், 9 விக்கெட்டுகள் கைப்பற்றினாலும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வில்லை. ஹெராத் (11 விக்.,) ஆறுதல் அளித்தார். வேகப்பந்து வீச்சாளர்களான வலகேதரா, தம்மிகா பிரசாத், குலசேகரா சோபிக்க தவறினர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய இலங்கை அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணிக்கு பாராட்டு:
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, நேற்று லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகர் மீரா குமார் கூறுகையில்,"" டெஸ்ட் அரங்கில் புதிய சாதனையை எட்டி மக்கள் மனதை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் தோனி, சேவக் உள்ளிட்ட வீரர்களுக்கு எனது சார்பிலும் லோக்சபா சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் தொடர்களில் இந்திய அணி வெற்றிகள் குவிக்க வாழ்த்துகிறேன்,''என்றார்.
நாக்பூரில் இந்திய அணி:
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்தியா மற்றும் இலங்கை அணியினர் நேற்று நாக்பூர் வந்தடைந்தனர். இரண்டாவது போட்டி வரும் 12ம் தேதி மொகாலியில் நடக்கிறது.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4507&Value3=I

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts