டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
கம்ப்யூட்டரின் உயிர்
நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை ( அதாவது உடலை ) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் ( அதாவது உயிர் ) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன?
உலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, "டிவி' போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை ( Instruction ) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது ( Execute ) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.
குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.
நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன வேலைகளைச் செய்கிறது?
கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை ( Management ) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் ( CPU ) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்
எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் - ஒரு பணி (Single User Single task)
2) ஒரு பயனாளர் - பல பணி (Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி (Multy User Multi task)
ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு பணி யினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.
ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர் / பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.
நன்றி : http://mytamilpeople.blogspot.com/2011/02/operating-system-functions-and.html
புதன், பிப்ரவரி 16, 2011
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக