ஒரு நாள் போட்டியின், ஒரே இன்னிங்சில் 219 ரன்கள் விளாசி, உலக சாதனை படைத்த சேவக்கிற்கு வாழ்த்துகள் குவிகின்றன. இவரது "ரோல் மாடல் சச்சின் உட்பட பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் வாயார பாராட்டியுள்ளனர்.
இந்தூரில் நேற்று முன் தினம் [08-12-11] நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 219 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் சேவக், ஒரு நாள் அரங்கில் புதிய வரலாறு படைத்தார். இவர், வீரர் சக வீரர் சச்சினின் சாதனையை முறியடித்தார்.
கடந்த 2010ல் குவாலியர் ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக சச்சின் 200 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போது அவர் கூறுகையில்,"எனது இந்த சாதனையை, சகவீரர் ஒருவர் முறியடித்தால் மகிழ்ச்சி தான்", என்றார்.
இதையடுத்து எல்லோரது எதிர்பார்ப்பும்சேவக் மீது திரும்பியது. சச்சின் சாதனையை முறியடிக்க, இவரால் மட்டுமே முடியும் என்றனர். இதற்கான வாய்ப்பு கடந்த உலக கோப்பை தொடரில் கிடைத்தது. வங்கதேசத்துக்கு எதிரான இப்போட்டியில் 175 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசியில் சச்சினின் சாதனையை, ஒன்றரை ஆண்டில் சேவக் தகர்த்து விட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 219 ரன்கள் அடித்துவிட்டார்.
இதுகுறித்து சேவக் கூறியது:
எனது "ரோல் மாடல் சச்சினின் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இருமுறை தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. தவிர, இந்த வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் கிடைக்கும். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டடேன்.
இந்த இரட்டை சதத்தை எனது தந்தைக்கு அர்ப்பணம் செய்கிறேன். மொத்தத்தில் இந்த இன்னிங்ஸ் சிறப்பானது ஆகும். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் களத்தில் இருந்து விளையாடலாம். ஆனால் ஒருநாள் போட்டியில் ரன்ரேட் முக்கியம். தவிர, ஆடுகளமும் சாதகமாக இருந்ததால் சாதிக்க முடிந்தது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா சென்ற இரு தொடர்களில் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். இம்முறையும் அதேபோல விளையாட முயற்சிப்போம்".
இவ்வாறு சேவக் கூறினார்.
இரட்டை சதம் அடித்த சேவக்கிற்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பாராட்டியுள்ளனர். சிலரது வாழ்த்துக்கள்:
சச்சின்: "வெல்டன் சேவக். எனது சாதனையை சக இந்திய வீரர் ஒருவர் முறியடித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
முரளி விஜய்:
சேவக் இரட்டை சதம் அடித்ததை பார்த்தேன். இது நம்பமுடியாமல் இருந்தது.
தினேஷ் கார்த்திக்:
நான் சேவக்கின் தீவிர ரசிகன். டெஸ்ட் போட்டியில் "டிரிபிள் சதம் அடித்த போதே, ஒருநாள் அரங்கில் 200 ரன்களை எட்டுவது இவருக்கு சாதாரணம் என நினைத்தேன். கடைசியில் சாதித்து விட்டார்.
கிரண் மோரே:
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வியத்தகு முன்னேற்றம் அடைந்ததற்கு, சேவக் தான் முக்கிய காரணம். மூன்று வித போட்டிகளிலும் அதிரடி தான் இவரது சிறப்பு. கடினமான ஆடுகளம், மாறுபட்ட சூழலிலும் இவர் அசத்துவார். சேவக்கை சச்சினுடன் ஒப்பிடக் கூடாது.
இதேபோல டென்னிஸ் பிரபலங்கள் மகேஷ் பூபதி, சானியா மிர்சா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சதம் அடித்தால் வெற்றி
ஒருநாள் போட்டிகளில் சேவக் இதுவரை 15 சதம் அடித்து, அதிக சதம் இந்திய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றார். முதல் இரு இடங்களில் சச்சின் (48), கங்குலி (22) உள்ளனர்.
* சேவக் சதம் அடித்த 15 போட்டிகளில் இந்திய அணி 14ல் வென்றுள்ளது.
* கேப்டனாக இருந்து அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை, ஜெயசூர்யாவிடம் (189, எதிர் இந்தியா, 2000) இருந்து, சேவக் தட்டிச் சென்றார்.
* டெஸ்டில் இருமுறை "டிரிபிள் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் இவர் தான்.
19ல் காதல்
சேவக் சாதித்த போட்டிகளில் கடைசி இரு எண்கள் 19 என உள்ளது. டெஸ்டில் அதிகபட்ச ஸ்கோர் 319 (எதிர், தென் ஆப்ரிக்கா), ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் (எதிர், வெஸ்ட் இண்டீஸ்) எடுத்துள்ள இவர், ஐ.பி.எல்., "டுவென்டி-20 போட்டியில் ( 2011, எதிர்-டெக்கான் சார்ஜர்ஸ்) அதிகபட்ச ரன்கள் 119 என்பது "ஸ்பெஷல் தான்.
இதுவும் "153 தான்
கடந்த 2010ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான குவாலியரில் சச்சின் இரட்டை சதம் அடித்த போட்டியில், இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூர் போட்டியில் சேவக், 219 ரன்கள் எடுத்த போதும், இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது அபூர்வமாக உள்ளது.
கேப்டனாக அசத்தல்
இந்திய வீரர் சேவக், தனது ஒவ்வொரு ரன்னும் ஒரு சாதனை படைத்தார். இவர் 45வது ரன்னை கடந்த போது, கேப்டனாக தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார். முன்னதாக இவர், 2009ல் இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நடந்த போட்டியில் 44 ரன்கள் எடுத்தார்.
* 82வது ரன்னை எட்டிய போது, இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக, 1994ல் சென்னையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த போட்டியில் அப்போதைய இந்திய அணி கேப்டன் அசார் 81 ரன்கள் எடுத்தார்.
* 100வது ரன்னை அடைந்த போது, ஒருநாள் போட்டியில் 15வது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2வது மற்றும் கேப்டனாக முதல் சதத்தை அடித்தார். தவிர இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிவேக சதம் (69 பந்து) அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், தனது முந்தைய சாதனையை முறியடித்தார். முன்னதாக 2002ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 75 பந்தில் சதம் அடித்தார்.
* 106வது ரன்னை கடந்த போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 2006ல், கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் அப்போதைய கேப்டன் டிராவிட் 105 ரன்கள் எடுத்தார்.
* 115வது ரன்னை எட்டிய போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார். முன்னதாக 2002ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில் 114 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* 118வது ரன்னை அடைந்த போது, இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக இத்தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் விராத் கோஹ்லி 117 ரன்கள் எடுத்தார்.
* 119வது ரன்னை கடந்த போது, இந்தூர் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக, 2008ல் யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக 118 ரன்கள் எடுத்தார்.
* 128வது ரன்னை எட்டிய போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 1985ல் சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஆலன் பார்டர் 127 ரன்கள் எடுத்தார்.
* 142வது ரன்னை அடைந்த போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 2006ல் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் சச்சின் 141 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* 147வது ரன்னை எட்டிய போது, இந்திய மண்ணில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். முன்னதாக 2009ல் இலங்கைக்கு எதிராக ராஜ்காட்டில் நடந்த போட்டியில் 146 ரன்கள் எடுத்தார்.
* 150வது ரன்னை கடந்த போது, அதிவேகமாக (112 பந்தில்) 150 ரன்னை அடைந்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக இந்த ஆண்டு குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் 118 பந்தில் இம்மைல்கல்லை எட்டினார்.
ஏழு சிக்சர்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அபாரமாக ஆடிய சேவக், ஒருநாள் அரங்கில் முதல் முறையாக ஒரே போட்டியில் ஏழு சிக்சர் விளாசினார். முன்னதாக இவர், நியூசிலாந்து (இடம்-ஹாமில்டன், 2009), இலங்கை (இடம்-ராஜ்காட், 2009) அணிகளுக்கு எதிராக தலா 6 சிக்சர் அடித்தார்.
சாதனை மேல் சாதனை
இந்தூரில் 219 ரன்கள் எடுத்த சேவக் பல்வேறு மைல்கற்களை கடந்தார். இதில் சில முக்கிய சாதனைகள்.
* 153வது ரன்னை அடைந்த போது, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 1989ல் ஜார்ஜ்டவுனில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 152 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* 174வது ரன்னை கடந்த போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 2001ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் 173 ரன்கள் எடுத்தார்.
* 176வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார். முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் மிர்புரில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 175 ரன்கள் எடுத்தார்.
* 187வது ரன்னை அடைந்த போது, ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 1999ல் நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் அப்போதைய கேப்டன் சச்சின் 186 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* 190வது ரன்னை கடந்த போது, ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். கடந்த 2000ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அப்போதைய இலங்கை கேப்டன் ஜெயசூர்யா 189 ரன்கள் எடுத்தார்.
* 200வது ரன்னை அடைந்த போது, ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் மற்றும் முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார். கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின் 200 ரன்கள் எடுத்தார்.
* 200வது ரன்னை எட்டிய போது, முதல் தர போட்டியில் 300 அல்லது அதற்கு மேல் (319), "ஏ பிரிவு போட்டியில் இரட்டை சதம் (219), "டுவென்டி-20 போட்டியில் சதம் (119) அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.
* 201வது ரன்னை அடைந்த போது, ஒருநாள் அரங்கில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின் 200 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் 219 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.
நன்றி & ஆதாரம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=11643&Value3=I
சனி, டிசம்பர் 10, 2011
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக