சனி, ஜூன் 12, 2010

ப்ளூடூத் ( Bluetooth)

பேசுக செல்பேசியில் அளவோடு; செலவானால்
பேசுதலின் குறுந்தகவல் நன்று.

இப்போதெல்லாம் செல்பேசி வாங்குபவர்கள், பேசுவதற்கும் குறுந்தகவல் அனுப்புவதற்கும்
மட்டும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை, செல்பேசியில் கேமெரா இருக்கிறதா? , ப்ளூடூத் எனப்படும் குறுந்தூர கம்பியில்லாத் தொடர்புமுறை வசதி இருக்கிறதா, அகச்சிவப்புத் துறை (Infra Red Port) இருக்கிறதா என்றெல்லாம் கவனித்துத் தான் வாங்குகிறர்கள் . தொழில்நுட்பத்தின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கையில் மின்னணுவியல் கருவிகளின் பயன்பாட்டு எல்லைகளும் விரிந்து கொண்டே செல்கின்றன. கருவிகளின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.










இந்தப் பதிவில் ப்ளூடூத் (Bluetooth) எனப்படும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொடர்பு முறை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ப்ளூடூத் என்பது ஒரு கம்பியில்லாத் தொடர்பு முறை. பத்து மீட்டர் தூரம் வரை இம்முறையைப் பயன்படுத்தி கேபிள்கள் இல்லாத ஒரு தொலைத்தொடர்பை ஏற்படுத்த முடியும். அன்றாட மின்னணுவியல் வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளை கம்பிகளின்றி இணைக்க ப்ளூடூத் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் தொழில்நுட்ப வரையறைகளைப் பார்ப்போமா?

அதிர்வெண்: 2.4 கிகாஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் பட்டை ஐ எஸ் எம் பட்டை (ISM Band- Industry, Sceince, Medicine)- தொழில் , அறிவியல் மற்றும் மருத்துவப் பட்டை என்றழைக்கப்படுகிறது. இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்த எவரிடமும் (அரசிடம்) அனுமதி பெறத்தேவையில்லை. தொழிலகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றூம் மருத்துவ ஆராய்ச்சிகள் ஆகியவற்றிற்கென இந்த அதிர்வெண் பட்டை ஒதுக்கப்பட்டிருப்பதால் , இதெற்கென தனியாக அரசிடம் அனுமதி பெறாமலேயே இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ப்ளூடூத் தொழில் நுட்பமும் இந்த அதிர்வெண்ணிலேயே இயங்குவதால் , ப்ளூடூத் கருவிகள் தயாரிப்பதும்,(உலகின் எந்தவொரு) பிற மின்னணுவியல் கருவிகளோடு எளிதில் தொடர்பு ஏற்படுத்துவதும் எளிதாகிறது.

வேகம்: வினாடிக்கு 1 மெகாபிட்ஸ் அதிகபட்ச வேகம்.

பயன்படுத்தபடும் நுட்பம்: அதிர்வெண் தாவல் பரவல் நிறமாலை முறை (Frequency Hopping Spread Spectrum). ஸி டி எம் ஏ (CDMA) நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பரவல் நிறமாலைத் தொடர்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. அதிர்வெண் தாவல் என்றால் , கருவியின் செலுத்தி (Transmitter ) ஒரே அதிர்வெண்ணில் இயங்காமல் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் பட்டையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்ணில் இயங்குகிறது. இரு கருவிகள் அதிர்வெண் தாவல் முறையில் தொடர்பு கொள்கின்றதெனில் , அவ்விரு கருவிகளும், எந்த நேரத்தில் எந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்ப/பெறப் போகின்றன என்பதை இரு கருவிகளும் முன்கூட்டியே முடிவு செய்து அதன் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.

சரி, தொழில்நுட்பச் செய்திகள் போதும், பெயர்க்காரணத்துக்கு வருவோம். இதை ஏன் ப்ளூடூத் என்று அழைக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தால், நீலப்பல் என்று வரும். நீலப்பல்லுக்கும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொலைத் தொடர்புக்கும் என்ன சம்மந்தம்?

பத்தாம் நுற்றாண்டில் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தவர் ஹெரால்டு ப்லூடன்ட் (Harald Bluetand) எனும் மன்னராவார். ப்லூடன்ட் என்றால், ஏறக்குறைய ப்ளூடூத் என்று பொருள் படுவதாகக் கூறுகிறார்கள். மன்னரின் பற்கள் ஒரு மாதிரியான நீல நிறத்தில் இருந்ததால் இப்பெயர் வந்ததெனக் கூறுவார்களும் உண்டு. சரி இவர் என்ன செய்தார்? நார்வே நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டபோது , படையெடுத்துச் சென்று , நார்வே-யை டென்மார்க்குடன் இணைத்துக் கொண்டாராம். அதற்கும் ப்ளூடூத் நுட்பத்திற்குப் பெயரிட்டதற்கும் தொடர்பு உண்டா? வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாடுகளை வென்று ஹெரால்ட் ப்லூடன்ட் தன்னாட்டுடன் இணைத்து , தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஆட்சி செய்தார். அது போல் உலகின் வெவ்வேறு பகுதிகளில் , வெவ்வேறு தொழில் நுட்பங்களுடன் இயங்கும் பல மின்னணுவியல் கருவிகளைக் கம்பியில்லாமல் இணைக்க இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இதற்கு ப்ளூடூத் என்று பெயர் வந்தது. நாமும் "நீலப்பல்" என்றெல்லாம் தமிழ்ப்படுத்தாமல் ப்ளூடூத் என்றே அழைக்கலாம்.

1994-ல் எரிக்ஸன் இத்தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் எரிக்ஸன், நோகியா, இன்டெல் , ஐ பி எம் மற்றும் தோஷிபா ஆகிய நிறுவங்கள் இணைந்து ப்ளூடூத் நுட்பத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தன. ப்ளூடூத் நுட்பத்திற்கான பொதுவான் வரையறைகள் தயாரிக்கப்பட்டு அவை நெறிப்படுத்தப்பட்டன. நாளடைவில் பிற நிறுவனங்களும் இத்தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன, ப்ளூடூத் சிறப்பு ஈடுபாட்டுக் குழு ஒன்று ( Special Interest Group) அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவங்கள் இக்குழுவில் பதிவு செய்து கொண்டுள்ளன.

ஆக இடைச் செயலாக்கம் (InterOperability) என்பது இத்தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. அதாவது ஒரு நிறுவனம் ப்ளூடூத் கருவிகளைத் தயாரிக்கிறது என்றால், அந்த ப்ளூடூத் கருவியைக் கொண்டு பிற நிறுவனங்கள் தயாரிக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் அந் நிறுவனம் தனது கருவிகளைத் தயாரித்துச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். ஒரு தொழில் நுட்பத்தின் வெற்றி இந்த இடைச் செயலாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

ப்ளூடூத் வரையறையில் (Specifications) இரண்டு பகுதிகள் உண்டு: அகப்பகுதி (Core) மற்றும் பயன்பாட்டுப்பகுதி ( Profile). அகப்பகுதியானது இந்தத்தொழில் நுட்பத்தின் மென்பொருள், வன்பொருள் எவ்வாறு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பதை விவரிக்கும் வரையறையாகும். எல்லாவிதமான ப்ளூடூத் கருவிகளும் இந்த அகப்பகுதியின் அடிப்படையிலேயே அமைந்தவை. இரண்டாவது பகுதியான பயன்பாட்டுப்பகுதி ( Profile) கருவிக்குக் கருவி வேறுபடும். ஒரு கருவி எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கேற்றாற்போல் இந்தப் பயன்பாட்டுப்பகுதியை ப்ளூடூத் கருவிகள் வடிவமைக்க வேண்டும். உதாரணமாய், ப்ளூடூத் காதுபேசி ( Earphone) என்றால் அதற்குரிய பேசிப்பயன்பாட்டுப் பகுதி (Headset Profile) அக்கருவியில் இருக்க வேண்டும். கணினியில் இணைக்கப்பயன்படும் ப்ளூடூத் பொருத்தி ( Bluetooth Adaptor) எனில், கோப்புகளை மாற்றும் பயன்பாட்டுப்பகுதி (File Transfer Profile) அக்கருவியில் இருக்க வேண்டும்.



ப்ளூடூத் கருவிகள் மற்றும் அவற்றின் உபயோகங்களைக் குறித்துப் பார்ப்போம்.

கருவிகளின் பயன்பாட்டின் அடிப்படையில் பல்வேறு வகையான ப்ளூடூத் சாதனங்கள் சந்தையில் விற்பனையாகின்றன. ப்ளூடூத் காதுபேசி (Bluetooth headset) செல்பேசியைக் கையில் பிடித்துப் பேசுவதற்குப் பதில் காதில் மாட்டிக்கொண்டு கையை வீசிக்கொண்டு பேசிச் செல்ல உதவுபவை இந்த ப்ளூடூத் காதுபேசிகள். முன்பெல்லாம் இத்தகைய கருவிகளை எவரேனும் பொருத்தியிருப்பின் பார்ப்பவர்கள் "ஐயோ , அவருக்குக் காது கேளாது போலிருக்கிறது" என்று பரிதாபப் படுவர். ஆனால் இப்போது உம்மாதிரியாகக் காதில் மாட்டிக் கொண்டு கையை வீசிக்கொண்டு தனியே பேசிச் செல்பவர்களை யாரும் ( "ஆள் ஒரு மாதிரியோ" என) ஐயுறுவதில்லை. ப்ளூடூத் சுட்டி மற்றும் விசைப்பலகை (Bluetooth Mouse and Keyboard) அலுவலகத்தில்/வீட்டில் பயன்படும் மேசைக் கணினியில் இருக்கும் விசைப்பலகை மற்றும் சுட்டியை நீங்கள் கேபிள் இணைப்பின்றி ப்ளூடூத் இணைப்பு மூலம் கணினியுடன் இணைத்துக் கொள்ளலாம். கணினியிலும் ஒரு ப்ளூடூத் கருவி இணைக்கப்பட்டு விசைப் பலகை மற்றும் சுட்டியின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும்.

கணினியுடன் இணைந்திருக்கும் சிறிய ஒலி பெருக்கிகளும் ப்ளூடூத் வசதியுடன் கேபிளின்றி இணைக்கப்பட்டால் கணினி மேசையில் கசமுசா என்று சிக்கிக் கிடக்கும் கேபிள்களிருந்து விடுதலை பெறலாம். மேலும் நினைத்த இடத்திற்கு சுட்டியையோ விசைப்பலகையையோ , நகர்த்தி உபயோகிப்பது சுலபமாகிறது பொது உபயோக ப்ளூடூத் பொருத்தி (General Purpose Bluetooth Adaptor).

கணினியில் இக்கருவியை இணைத்துக் கொண்டால் போதும். பிற ப்ளூடூத் கருவிகளுடன் அவற்றின் உபயோகத்திற்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புப் பரிமாற்றம் (File Transfer ), இணைய இணைப்பு வசதி , காது பேசியுடன் இணைப்பு, தொடர் துறை (Serial Port) இணைப்பு, தொலைநகல் அனுப்பல் போன்ற பல வசதிகளை இந்தப் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளலாம். செல்பேசிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ப்ளூடூத் கருவியும் மேற்கூறிய வசதிகளை ஏற்படுத்தித் தரும் திறன் படைத்தது. செல்பேசியிலிருந்து கணினிக்கோ , கணினியிலிருந்து செல்பேசிக்கோ ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு, கோப்புப் பரிமாற்றம் செய்வது எளிதாகிறது. ஜி பி ஆர் எஸ் வசதி கொண்ட செல்பேசியிலிருந்து இணைய இணைப்பு ஏற்படுத்திக்கொண்டு, அழைப்புவழி (Dial up)சேவையைப் பயன்படுத்தி , இணைய இணைப்பினை கணினிக்கு கொண்டு செல்ல முடியும். மடிக்கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி ஒரு வரப்பிரசாதம். கேபிள்கள் ஏதும் இல்லாமலேயே இணைய வசதியை எங்கு சென்றாலும் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. ப்ளூடூத் அணுகு புள்ளி (
Bluetooth Access Point) இணைய இணைப்பினையோ அல்லது அலுவலகத்தின் உள் வலையமைப்பில் (Intranet) இணையவோ ப்ளூடூத் அணுகு புள்ளிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அலுவலகங்களில் புதிய கணினி இணைப்புகளை ஏற்படுத்துவதும், இருக்கும் இணைப்புகளை எளிதாக வேறிடத்துக்கு மாற்றுவதும் நொடியில் முடிகிறது. இதுபோலவே அலுவலகத்தின் அச்சடிப்பானுடன் ( Printer) ப்ளூடூத் இணைப்பின் மூலம் கோப்புக்களை அச்செடுக்க முடியும். தொலைநகல் எடுப்பதும் அனுப்புவதும் எளிதாகிறது. குறுக்கும் நெடுக்குமாக அலுவலகங்களில் விரவிக்கிடக்கும் கேபிள்களை நீக்க இந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் ப்ளூடூத் நுட்பத்தினால் வேகம் சற்றே குறைவாக இருப்பதால் கம்பியில்லாக் குறும்பரப்பு வலையமைப்பு ( Wireless Local Area Network , WLAN) தற்போது பிரபலமடைந்து வருகிறது.

இது தவிர, கார்களிலும் ப்ளூடூத் கருவிகளைக் கொண்டு (Bluetooth Car-kit) செல்பேசிகளுடன் தொடர்பேர்படுத்திக் கொண்டு, செல்பேசியைக் கையில் தொடாமலேயே அழைப்புகளை இணைக்கவும், பேசவும் முடியும். கார்களில் நாம் இசை கேட்டுக்கொண்டே செல்கையில் ஏதேனும் அழைப்பு ஏற்படின், இசையை நிறுத்தி வைத்து, நாம் பேசி முடித்ததும் மீண்டும் இசையைத் தொடர இந்தக் கருவிகள் உதவுகின்றன. சரி, இரு ப்ளூடூத் கருவிகள் அருகருகே நெருங்கையில் தாமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து தகவல் அனுப்பத் தொடங்கிவிடுமா? இல்லை. அவ்வாறு தாமாக இணைந்து கொண்டு தகவல் பரிமாரிமாறும் வசதி இருந்தால் அது பாதுகாப்பான தகவல்தொடர்பு முறையே அல்ல. ப்ளூடூத் கருவிகள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பதைப் பின்வருமாறு எளிதாய் விளக்கலாம்.

1. இரு கருவிகளிலும் ப்ளூடூத் இயக்கம் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் (Bluetooth ON).

2. கருவிகள் இரண்டும் கண்டுபிடிப்பு நிலையில் (Discoverable mode) இருக்க வேண்டும். இந்த நிலையானது ஏற்படுத்தப் பட்டிருந்தால் மட்டுமே பிற கருவிகள் அந்தக் கருவி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக, நீங்கள் உங்களது ப்ளூடூத் கருவியை இயக்கியவுடன் அது கண்டுபிடிப்பு நிலையில் இயங்கத்தொடங்கும்.

3. ப்ளூடூத் கருவிக்கென அமைக்கப்பட்டிருக்கும் அமைப்புப் பகுதிக்குச் (Settings) சென்று , அருகிலுள்ள பிற கருவிகளைக் கண்டுபிடிக்கும் பட்டியை சுட்டுங்கள் . உங்களது ப்ளூடூத் கருவி உடனே, பிற கருவிகளைத் தேட ஆரம்பிக்கும். கண்டுபிடிப்பு நிலையில் உள்ள பிற கருவிகளைத் தேடி, அவற்றைப் பட்டியலிட்டு உங்கள் முன் நிறுத்தும்.

4. நீங்கள் இணைப்பு ஏற்படுத்த விரும்பும் கருவியைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்களது கருவி குறிப்பிட்ட மற்றொரு கருவியுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கும். நீங்கள் இணைப்புக் கேட்டவுடன் இணைப்பு ஏற்படுத்த அனுமதிப்பதும், மறுப்பதும் எதிர்கருவியின் விருப்பம்.

5. உங்களது ப்ளூடூத் கருவியுடன் இணைய விருப்பம் எனில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒரு கடவுச்சொல்லை (Pass key) இணைத்து அனுப்பும்.

6. அக்கருவி அனுப்பும் கடவுச்சொல்லை உங்கள் கருவியில் உள்ளிட்டு அனுப்புங்கள். கடவுச் சொல் வேறுபட்டால் தொடர்பு மறுக்கப்படும். சரியான கடவுச் சொல் சரிபார்க்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்படும். இணைப்பு ஏற்படுத்தியாகி விட்டது. எவ்வாறு தகவல் பரிமாறுவது? அல்லது எவ்வாறு ப்ளூடூத் இணைப்பைப் பயன்படுத்துவது?


ப்ளூடூத் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக்கொள்ளுமுன் அவை வழங்கும் சேவைகள் பற்றிய தகவல்கள் அக்கருவிகளுக்கிடையே தெரிந்திருக்க வேண்டும். அதாவது இரு வேறு சேவை வழங்கும் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டால் பயனில்லையே. உதாரணமாக, கோப்புப் பரிமாற்றம் செய்ய வேண்டுமனில், இரண்டு ப்ளூடூத் கருவிகளிடமும் கோப்புப் பரிமாற்றத்துக்கான சேவை (File Transfer) இருக்க வேண்டும்.

ப்ளூடூத் கருவிகள் (சென்ற பதிவில் கூறியது போல்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இணைந்தவுடன் இணைப்பு (Pairing) ஏற்படுத்தப்படுகிறது. பின்னர் இரு கருவிகளின் சேவையை கண்டுபிடிக்கும் (Service discovery) நிகழ்வும் ஏற்படுத்தலாம். அவ்வாறு சேவை கண்டுபிடித்தல் செய்த பின்பே ஒரு கருவியின் உபயோகம் மற்ற கருவிக்குத் தெரிய வரும். கடவுச் சொல் கொண்டு ஏற்படுத்தப்படும் இணைப்பு பாதுகாப்பானது. அவ்வாறு கடவுச் சொல் இல்லாமல் ஏற்படுத்தப்படும் இணைப்புகளால் உங்கள் அனுமதியின்றி தகவல் உங்கள் கணினி அல்லது செல்பேசியிலிருந்து திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்துகையில் பாதுகாப்பான (Secured data transfer) பரிமாற்ற வகையை உங்கள் கருவியின் அமைப்புப் பகுதியில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

பொதுவிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி வைத்தல் சாலச் சிறந்தது. உங்களது செல்பேசியின் ப்ளூடூத் கருவி இயக்க நிலையில் இருந்தால் பிற கருவிகள் உங்களது செல்பேசியுடன் இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கலாம் . பாதுகாப்பான பரிமாற்ற முறையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கவில்லை எனில் உங்கள் செல்பேசியிலிருக்கும் தகவல்களை நீங்கள் அறியாமலேயே பிறர் திருடிக்கொள்ளலாம் . விஷமிகள் , பொதுவிடங்களில் இயக்கத்திலிருக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து , மிரட்டும் தகவல்களை அனுப்பலாம். "You are Bluejacked" என்ற தகவல் இவற்றுள் பிரபலமான பயமுறுத்தும் தகவல் . இத்தகவலால் செல்பேசிக்குப் பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் , நாம் மிரண்டு போய், செல்பேசிக்கு ஏதோ பிரச்சினை ஆகிவிட்டது என்று தவறாய் எண்ண வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.இம்மாதிரித் தகவல்கள் உங்கள் செல்பேசியில் , நீங்கள் பொதுவிடங்களில் இருக்கும் போது ஏற்படின் தகவலப் புறக்கணித்து உடனடியாக உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி விடுங்கள்.

சென்ற வருடத்தில் பரபரப்பூட்டிய கபீர் எனும் செல்பேசி வைரஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கணினி வைரஸ் பல உலவும் இன்னாளில் , முதன் முதலில் செல்போனில் பரவிய வைரஸ் கபிர் ஆகும். எல்லாச் செல்பேசிகளிலும் இது பரவவில்லை. ஸிம்பியன் இயங்குதளம் அமைந்துள்ள செல்பேசிகளில் தான் இது பரவியது. நோக்கியாவின் செல்பேசிகள் பலவும் இந்த இயங்குதளம் கொண்டு அமைக்கப்பட்டிருப்பவை . ப்ளூடூத் மூலம் ஒரு செல்பேசியிலிருந்து மற்றொரு செல்பேசிக்குப் பரவும் வைரஸ்தானிது. ப்ளூடூத் மூலம் உங்களது செல்பேசிக்கு வரும் இந்த கோப்பு தகவல்பெட்டியில் (Inbox) சேகரிக்கப்படுகிறது. எதோ தகவல் வந்திருக்கிறது என்று எண்ணி இந்தக் கோப்பைத் திறந்தீர்களேயானால் , உங்களது ப்ளூடூத் அமைப்பினை மாற்றி, இந்தக் கோப்பினை அருகிலுள்ள பிற ப்ளூடூத் வசதியுள்ள செல்பேசிகளுக்கு அனுப்பி அந்தச் செல்பேசியையும் பாதிக்கும் குணம் கொன்டது இந்த வைரஸ் . இந்த வைரஸினால் செல்பேசியின் இயல்பான ப்ளூடூத் இயக்கம் பாதிக்கப்படுகிறது. ப்ளூடூத் இயக்கத்தினை நீங்கள் நிறுத்தி வைத்தாலும் , இந்த வைரஸ் உங்களது செல்பேசியில் நுழைந்து விட்டதெனில், தானாக, ப்ளூடூத் இயக்கத்தை ஆரம்பித்து அருகே உள்ள பிற ப்ளூடூத் செல்பேசிகளுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.

மேற்குறிப்பிட்ட ஒரு வைரஸ் மட்டுமே செல்பேசி வைரஸ் என அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு புரளிகள் இணையத்திலும் , மின்னஞ்சல் வழியாகவும் கிளப்பி விடப்படுகின்றன. "இந்த வகை எண்களிலிருந்து அழைப்பு ஏற்படின் அவ்வழைப்பை ஏற்க மறுத்து விடுங்கள் . அவ்வழைப்பினை ஏற்றுப் பேசினீர்களேயானால், உங்கள் செல்பேசியின் எண், ஸிம் அட்டையின் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் " என்றெல்லாம் கூறிப் பல மின்னஞ்சல்கள் உங்களுக்கு வருவதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வகைத் தகவல்கள் அனைத்தும் புரளியே !

ப்ளூடூத் கருவிகளின் பயன்பாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது கம்பியில்லா காது பேசியும், கணினியில் பயன்படும் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியும் தான் . அழைப்பு ஏற்பட்டால், ப்ளூடூத் காதுபேசியைப் பயன்படுத்தி, செல்பேசியின் விசையை அழுத்தாமலேயே தானாக அழைப்பை ஏற்றுப் பேசலாம் (Auto Answer). தற்போது செல்பேசியிலேயே பாடல் கேட்கும் வசதி வந்துவிட்டதால் ஸ்டீரியோ வகை ப்ளூடூத் காதுபேசிகள் அறிமுகமாகப் போகின்றன. ஆக, இனிவரும் காலங்களில் , மின்னணுவியில் சாதனங்களில் மின்சார கேபிள்கள் தவிர வேறு எந்தத் தேவைக்கும் கேபிள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது !

ஆதாரம் : http://www.tamiloviam.com/unicode/09220506.asp

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts