புதன், செப்டம்பர் 15, 2010

இனி வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம்

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், “கம்ப்யூட்டர் நெட் ஒர்க்’ மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.

இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.

இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே “ஆன்லைனில்’ பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கமிஷனர் ஜீவரத்தினம் கூறியதாவது: புதிய வசதி மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். கம்ப்யூட்டரில் அதற்காக விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் “ஸ்கேன்’ செய்து அனுப்ப வேண்டும். அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும். மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை,” என்றார்.

நன்றி : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84045

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts