இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். சிறந்த டெஸ்ட் வீரராக சேவக் தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2009, ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 2010, ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை ஓட்டெடுப்பு மூலம் 25 பேர் அடங்கிய குழு தேர்வு செய்தது. நேற்று பெங்களூருவில் நடந்த வண்ணமயமான விழாவில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை சச்சின் பெற்றார்.
முதல் முறை:இவ்விருதுக்கான காலக் கட்டத்தில் சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்கள்(81.84 சராசரி) எடுத்துள்ளார். 17 ஒரு நாள் போட்டிகளில் 914 ரன்கள்(65.28 சராசரி) எடுத்துள்ளார். தவிர, குவாலியர் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இப்படி சிறப்பாக செயல்பட, ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதல் முறையாக கைப்பற்றினார். இவர், தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தின் ஸ்வான் மற்றும் சேவக்கை முந்தி இவ்விருதை வென்றார். தவிர, மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதையும் பெற்றார்.
கிறிஸ்டன் காரணம்:இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது 21வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஐ.சி.சி., விருதை பெற்றுள்ளேன். இதனை பெற கடினமாக பாடுபட்டுள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் முக்கிய காரணம். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட, சிறந்த பயிற்சி அளித்தார். வலை பயிற்சியின் போது, அவரே பல முறை பவுலிங் செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனது கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் கனவு. இதற்காக கடினமாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
எனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய பத்மபூஷன் விருதையும் முதல் ஐ.சி.சி., விருதையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனாலும், பத்ம பூஷன் விருது உண்மையிலேயே "ஸ்பெஷல்' கவுரவம்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
கேப்டன் தோனி:ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை இந்தியாவின் சேவக் பெற்றார். ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் கைப்பற்றினார். ஐ.சி.சி., உலக டெஸ்ட் லெவன் அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், சேவக், சங்ககரா, ஸ்வான், ஆம்லா, கேடிச், ஸ்டைன், காலிஸ், ஆண்டர்சன், போலிஞ்சர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணிக்கு கேப்டனாக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், வாட்சன், ஹசி, டிவிலியர்ஸ், தோனி, வெட்டோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் பெற்றார். இவர், கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் 56 பந்தில் 116 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.
சிறந்த அம்பயர்:வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பெற்றார். விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய அணிக்கான விருதை நியூசிலாந்து கைப்பற்றியது. சிறந்த அம்பயருக்கான விருதை பாகிஸ்தானின் ஆலீம் தார் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஷெல்லி நிட்ச்கே, ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதை கைப்பற்றினார்.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7248&Value3=I
வியாழன், அக்டோபர் 07, 2010
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக