சனி, மார்ச் 10, 2012

பிள்ளையார் சுழி போட்டு விட்டார் டிராவிட்... பின் தொடருவாரா சச்சின்?

மூத்த வீரர்கள் போக வேண்டும், போயே ஆக வேண்டும் என்ற பலத்த கூக்குரல்களுக்கு மத்தியில், ஒரு ஜென்டில்மேன் வீரர் தனது ஓய்வை அழகாக அறிவித்து விட்டார். ராகுல் டிராவிடின் ஓய்வு முடிவு டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும், சுவாசிக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் பெருத்த ஏமாற்றம்தான். ஆனால் எதற்கும் ஒரு முடிவு ஒன்று இருக்குமில்லையா, அதைத்தான் ராகுல் இன்று செய்துள்ளார். ஆனால் சச்சின் எப்போது இந்த முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.

நிச்சயம் சச்சினை யாரும் குறைத்து மதிப்பிடப் போவதில்லை, முடியவும் முடியாது. பிராட்மேனையே மிஞ்சியவர்தான் சச்சின், சந்தேகமில்லை. அவரைப் போன்ற ஒரு பிரமாதமான வீரர் நிச்சயம் இந்த நிமிடத்தில் யாரும் இல்லைதான். ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டு இல்லையா, இன்று டிராவிட் செய்ததை நாளை நிச்சயம் சச்சினும் செய்யத்தான் போகிறார். ஆனால் எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாக செய் என்பது பழமொழி. அந்த வகையில், கெளரவமான நேரத்தில் விடைபெறுவதுதான் சாலச் சிறந்தது, சிறப்பானது என்பது இங்கு நோக்கப்பட வேண்டியதாகும்.

ராகுல் டிராவிட் அதைத் தான் செய்துள்ளார். பெரிசுகள் எல்லோம் கிளம்பிப் போக வேண்டும் என்ற பேச்சு கிளம்பியதுமே தனது ஒரு நாள் போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்தார் டிராவிட். ஆனால் அந்த ஓய்வு முடிவை அறிவித்தபோது அவர் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் பிரமாதமாக ஆடிக் கொண்டிருந்தார் - அவர் மட்டும்தான் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார் என்பதையும் சொல்ல வேண்டும். அப்போது, வி.வி.எஸ்.லட்சுமன் கூட ஏமாற்றி விட்டார் - சச்சினும்தான்.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த டிராவிட், எதிர்பார்த்தது போல ஜொலிக்க முடியவில்லை. குறிப்பாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் அத்தனை வீரர்களுமே, டிராவிட் உள்பட சரியாக ஆடவில்லை- சச்சினும்தான்.

எனவேதான் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று வழி விட வேண்டும். இளம் தலைமுறையினரை தயார் படுத்த வேண்டும். அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக புதிய இந்திய அணியை உருவாக்க வேண்டியது அவசியம் என்று பலரும், குறிப்பாக கவாஸ்கர் போன்றவர்களும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

வி.வி.எஸ்.லட்சுமன் விலக வேண்டும், ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். சச்சினும் விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர் - கவாஸ்கரும்தான்.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் சட்டென தனது முடிவை சந்தோஷமாக அறிவித்துள்ளார் டிராவிட். இதன் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் சீனப் பெருஞ்சுவராக உயர்ந்திருக்கிறார் டிராவிட்.

அவரது சாதனைகள் சாதாரணமானவை அல்ல. கங்குலி காலத்தில் இவரைப் போல யாரும் படாதபாடு பட்டிருக்க மாட்டார்கள். காரணம், ஒரு பேட்ஸ்மேனாக ரன்களைக் குவிக்கவும் வைத்தார், அதேபோல விக்கெட் கீப்பர் வேலையையும் சுமத்தி பென்டெடுத்தார் கங்குலி. ஆனாலும் சற்றும் சளைக்காமல் 'கேப்டன்' இட்ட பணிகளை 'காட்' இட்ட பணியாக நினைத்து பிரமாதமாக ஆடி அசத்தியவர்தான் டிராவிட்.

இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக வலம் வந்தபோதிலும், டெஸ்ட் போட்டிகளில் ரன் குவித்தோர் பட்டியலில் 2வது இடம், கேட்ச் பிடிப்பதில் சாதனை என பல பெருமைகளை கையில் வைத்திருந்தபோதும், மூத்தவர்கள் சரியாக ஆடவில்லை என்ற பேச்சு கிளம்பியுடனேயே தனது ஓய்வை அறிவித்திருப்பது நிச்சயம் டிராவிடுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தான்.

டிராவிடைப் பின்பற்றப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இப்போதைக்கு பட்டியலில் இருப்பவர்கள் சச்சின் டெண்டுல்கரும், விவிஎஸ் லட்சுமனும்தான். பெரிய பட்டியல் கூட இல்லை. இரண்டே இரண்டு பேர்தான்.

இதில் எப்படியும் லட்சுமனை சீக்கிரமே ஓரம் கட்டி விட வாய்ப்புள்ளது. ஆனால் சச்சினை அப்படிச் செய்ய மாட்டார்கள். காரணம், அவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படுகிறவர் என்பதால், கடவுளைப் போய் எப்படிப்பா ஓரம் கட்டுவது என்று மூக்கை உறிஞ்சியபடியே ஸ்ரீகாந்த் கேட்டாலும் கேட்பார். எனவே சச்சினாகப் பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வந்தாக வேண்டும்.

ஒன்றுமில்லை, ஒரு நாள் போட்டிகளிலிருந்து மட்டும் சச்சின் ஓய்வு பெற்றால் கூட போதும். அவர் சாதிக்க வேண்டிய பிற சாதனைகளை அடுத்த ஒன்று அல்லது 2 டெஸ்ட் தொடரில் அவர் சாதித்து விட முடியும். ஏற்கனவே அவர் சர்வதேச 20 டுவென்டி போட்டிகளில் ஆடுவதில்லை. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமதான் ஆடி வருகிறார். அப்படியே ஒரு நாள் போட்டிகளையும் அவர் நிறுத்தி விடலாம். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரலாம். இதன் மூலம் அவர் மேலும் சில ஆண்டுகள் வரை விளையாட முடியும். காரணம், அவருக்குள் கிரிக்கெட் முழுமையாக வற்றிப் போய் விடவில்லை. எங்கேயோ பிளாக் ஆகி நிற்கிறது, அந்த அடைப்பை சரி செய்ய இந்த பிரேக் உதவலாம்.

கடவுள் நினைப்பதை யாராலும் ஊகிக்க முடியாது. சச்சின் விஷயத்திலும் கூட அப்படித்தான். ஆனால் கடவுள் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைப்பார். சச்சின் எப்படியோ...

மூலம் : http://vizhiyepesu.blogspot.com/2012/03/blog-post_4423.html

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts