இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஜூலை 14 அன்று மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.
இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.
அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.
இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.
இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.
மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.
பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஆதாரம் : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1052&ncat=4
சனி, ஜூலை 31, 2010
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக